தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சிகள் காரணமாக, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது 96-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, அட்டப்பாடி பள்ளத்தாக்கில் அணை கட்டும் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு நிலையான ஆய்வு வரம்புகளை வழங்கலாம் என்று அறிவித்தது. ஆனால் தற்போது அந்த பரிந்துரையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பான நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் முடிவுறும் வரையிலும் அல்லது தமிழ்நாடு அரசின் சம்மதத்தை பெறும் வரையிலும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.