பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகிய இருவரும் இந்தியா வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சார்லஸ், இந்தியாவில் புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா அரசு முறை பயணமாக அடுத்த ஆண்டு இந்தியா வர இருப்பதாக லண்டனில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கும் மன்னர் சார்லஸ் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் உள்ளது. வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அளவுக்கு மன்னரின் உடல்நிலை சரியாக இருக்கிறதா என்பதை மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். அதன் பின்னர் இந்தியா வருகை குறித்து தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
அரசு முறை பயணமாக பிரிட்டன் மன்னர் இந்தியா வருவது உலக அரங்கில் முக்கியத்துவம் பெறும் நிகழ்வாகும். மேலும், அவர் புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்வதும் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.