தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்ஷித், வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுவன் ரக்ஷித்தை ஒரு வெறிநாய் கடித்தது. நாய் கடித்த அதிர்ச்சியில், சிறுவன் அருகிலிருந்த கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான். எனினும், நாய் கடித்ததற்கான தீவிரத்தை உணர்ந்து உரிய நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.
தடுப்பூசி போடப்படாததால், சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவியுள்ளது. தீவிரமான உடல்நல குறைபாடுகளுக்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
வெறிநாய் கடித்தால், உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போடுவது கட்டாயமாகும். இந்த தடுப்பூசி, நோய்த்தொற்று மூளைக்கு பரவாமல் தடுக்கும். உரிய நேரத்தில் தடுப்பூசி போடாததால், ரேபிஸ் நோய்த்தொற்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த சோகமான நிகழ்வு, செல்ல பிராணிகள் மற்றும் தெருநாய்களிடம் இருந்து வரும் கடிக்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.