வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
கறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு இம்மாதம் 28 ஆம் தேதி விசாரணை நடத்தியது.
இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு அனைத்துமே சட்டவிரோதமானதல்ல என்றும், அவற்றில் கறுப்பு பணம் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தால் அவை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவரின் விவரங்களை மூடி சீலிட்ட உரையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அரசுக்குக் கிடைத்த பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பான முழுப் பட்டியலையும் மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.