மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அடுத்த பிரதமர் தேவேந்திர பட்னாவிஸ் என பலர் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் 105 இடங்களில் வெற்றிப்பெற்றும் பாஜகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. அஜித் பவாரின் கட்சி தாவலால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றாலும் அது நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கவில்லை. பெரும்பான்மை நிரூபிப்பதில் சிக்கல் உள்ளதை உணர்ந்த பட்னாவிஸ் தனது பதவியை தானே ராஜினாமா செய்தார்.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையோடு முதல்வருக்காக அரசு வழங்கும் வீட்டிலிருந்தும் வெளியேறி, வெளியே வாடகைக்கு வீடு தேடி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த முதல்வர் ஒருவர் வாடகைக்கு வீடு தேடி வருவது அவரது ஆதரவாளர்களை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
பாஜகவினர் எளிமையான வாழ்க்கை வாழும் மனிதரென்றால் உடனடியாக பிரதம்ர் மோடியைதான் உதாரணமாக சொல்வார்கள். தனது எளிமையான வாழ்வின் மூலம் பிரதமர் பதவி வரை உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடியே பேசியிருக்கிறார். அந்த வகையில் எளிமைக்கு அடுத்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் தேவேந்திர பட்னாவிஸ். எனவே அவர்தான் அடுத்த பிரதமராக தகுதியுடையவர் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் #DevendraFadanvisForPM என்ற பெயரில் ட்ரெண்டாகி வருகின்றன.