ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக சதி செய்து வருவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க முயற்சித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” கடந்த 9 ஆண்டாகவே ஆம் ஆத்மி அரசை கவிழ்ப்பதற்கு பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தது என தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகிகள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொண்டு பேசியதற்கான ஆடியோ பதிவுகள் உள்ளன என்றும் டெல்லி அரசை கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறவில்லை என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ரூ.25 கோடி கொடுப்பதாக 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் பேசியுள்ளது என்று அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்
அமலாக்கத்துறை மூலம் தம்மை கைது செய்து ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கவும் பாஜக சதி செய்து வருகிறது என்றும் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கை காரணம் காட்டி தன்னை கைது செய்ய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னை கைது செய்வதைவிட ஆட்சியை கவிழ்ப்பதே பாஜகவின் திட்டம் ஆகும் என குறிப்பிட்டுள்ள அவர், பாஜகவினர் தொடர்பு கொண்ட 7 எம்.எல்.ஏக்களும் பேரத்துக்கு பணிய முடியாது என தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.