சீனா – இந்தியா எல்லை மோதல் விவகாரத்தில் பிரதமரை தொடர்ந்து விமர்சித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது பாஜக செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இருநாட்டு அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சீன விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சீனா ராணுவத்திடம் நடந்த தாக்குதல் குறித்து ராகுல்காந்தி ட்விட்டர் மூலமாக தொடர்ந்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். தொடர்ந்து பிரதமர் மோடி குறித்தும் அவர் பதிவிடும் கருத்துகளுக்கு பாஜகவினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா ”பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கொரோனா, எல்லை பிரச்சினை, காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. எல்லை பிரச்சினை குறித்து பேச அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவுள்ள நிலையில் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் குறித்து ட்விட்டரில் பதிவிடுவது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் “இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் பொறுப்பற்ற அரசியல்வாதி ராகுல்காந்தி. எதையும் படித்து பார்த்து புரிந்துகொண்ட பின் பேச வேண்டும். உங்கள் அரசியலை தொடங்க நாட்டின் பிரதமர் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூற வேண்டாம்” என பேசியுள்ளார்.