டெல்லியில் உள்ள சில பகுதிகளில், ஒரு ஓட்டுக்கு பாஜக 3,000 ரூபாய் கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பாஜகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருக்கிறது. சேரி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாய் கொடுப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "பாஜகவினர் வீடு வீடாக சென்று 3,000 ரூபாய் கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
அவர் மேலும், "பாஜகவினர் உங்களுக்கு பணம் கொடுத்தால், அதை தாராளமாக வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், குடிசை குடியிருப்புகளை அகற்றிவிடுவார்கள். மும்பையில், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியை, தங்கள் நண்பருக்கு வழங்கி விட்டனர். அதுபோல்தான் டெல்லியிலும் நடக்கும்" என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva