பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நாய்க்கு வசிப்பிட சான்றிதழ் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கடவுள்கள் மற்றும் பறவைகளின் பெயர்களிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
சுகார் மாவட்டத்தில் ஆன்லைனில் வசிப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்ட சில விண்ணப்பங்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர் ஸ்ரீராமர் என்றும், தந்தையின் பெயர் தசரதன், தாய் பெயர் கௌசல்யா, கிராமத்தின் பெயர் அயோத்தி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல், சீதை என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு விண்ணப்பத்தில், தந்தை பெயர் ஜனகன், தாய் பெயர் சுனைனா, கிராமம் அயோத்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றொரு விசித்திரமான விண்ணப்பத்தில், விண்ணப்பதாரரின் பெயராக காகம் என்று குறிப்பிடப்பட்டு, அதன் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பங்களில் சில, அரசு அதிகாரிகளின் சரிபார்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு போலியாக விண்ணப்பிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படும் அதே நேரத்தில், அரசு நிர்வாகம் சரிபார்ப்பு இல்லாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது, அரசு நடைமுறைகளின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.