பீகாரில் ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தில் 100க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், மணமகன் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியவும், பொது இடைவெளியை பின்பற்றவும், முக்கியமாக கூட்டம் சேருவதை தவிர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பல இடங்களில் மக்கள் விழிப்புணர்வின்றி அரசின் அறிவுறுத்தல்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பாலிகஞ்ச் பகுதியில் கோலாகலமாக சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதில் பலர் கலந்து கொண்டுள்ளனர். மணமகனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் இதை அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் உறவினர்கள் அவரது உடலை எரித்து விட்டார்கள்.
இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் உடனடியாக திருமணத்தில் கலந்து கொண்டவர்களை பரிசோதித்ததில் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணமகனுக்கு கொரோனா இருப்பதை மறைத்து திருமணம் நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். பீகாரில் ஏற்பட்டுள்ள பெரும் கொரோனா தொற்று இது என்பது குறிப்பிடத்தக்கது.