பீகாரில் விலை உயர்ந்த கேம் மொபைல்களை வாங்க சிறுவன் ஒருவன் தன்னை தானே கடத்திக் கொண்டு நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் தந்தையற்ற சிறுவன் ஒருவன் தாயுடன் வாழ்ந்து வந்துள்ளான். ஆன்லைன் கேம் விளையாடுவதில் தீவிரமான ஈடுபாடு கொண்ட சிறுவன் சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாயமாகியுள்ளான். அவனிடம் இருந்த போன் மூலமாக சிறுவனின் தாய்க்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் சிறுவனை கடத்தியுள்ளதாகவும் 5 லட்சம் கொடுத்தால் மட்டுமே சிறுவனை மீட்க முடியும் என்று மிரட்டல் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த தாய் போலீஸில் புகார் அளிக்க அவர்கள் செல்போன் சிக்னலை கொண்டு சிறுவனை கண்டுபிடித்தனர். சிறுவனை யாரும் கடத்தவில்லை என்றும், சிறுவனே தன்னைத்தானே கடத்திக் கொண்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேம் விளையாடுவதில் ஆர்வம் உள்ள சிறுவன் சமீபத்தில் தன் தாய் 3 லட்சம் வங்கியில் கடன் வாங்கியதை தெரிந்து கொண்டு அதை அபகரிக்க இந்த திட்டத்தை போட்டதாக தெரிகிறது.
அந்த பணத்தை கொண்டு அதிநவின மொபைல் போன் ஒன்று வாங்கவும், கிரிக்கெட் அகாடமியில் சேரவும் சிறுவன் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.