மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தியாவின் சில வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவித்தார். அதன்படி பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கி ஆகியவைகளும், கனரா வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவைகளும், .இந்தியன் வங்கி, அலஹாபாத் வங்கி ஆகியவைகளும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க் மற்றும் கார்பரேஷன் வங்கி ஆகிய மூன்று வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த இணைப்பு அறிவிப்பு வங்கி ஊழியர்களையும் வங்கி வாடிக்கையாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த இணைப்பால் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து இல்லை என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினாலும் ஊழியர்கள் சிலர் வீட்டுக்கு அனுப்பவே இந்த திட்டம் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது
இந்த நிலையில் வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு செய்துள்ளது. இதனால் வங்கிப்பணிகள் பாதிக்கப்படும் என்பதால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதியுற வாய்ப்பு உள்ளது. எனவே அவசர தேவைக்கு இன்றே ஏடிஎம்களில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.