பாபா ராம் தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் வேறு நிறுவன போலி தயாரிப்பு பொருட்களை பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு என மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக பதஞ்சலி நிறுவனம் பெயரெடுத்து உள்ளது. இந்திய சந்தையில் காஸ்மிடிக் மற்றும் அழகு சாதனம் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக பதஞ்சலி நிறுவனம் உள்ளது. ஆனால், இதற்கு மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் ஒரு காரணம் என்ற புகாரும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த புதிய மோசடி அம்பலமாகியுள்ளது. கடந்த 2012 ஆகஸ்ட் 16ஆம் தேதி ஹரித்துவார் சுகாதாரத்துறை பதஞ்சலி உற்பத்தி பொருட்கள் மீது வந்த புகார்கள் அளிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு பிரிவு சோதனையில் பதஞ்சலி நிறுவன உற்பத்தி பொருட்கள் போலியானது என்று ஆய்வில் தெரியவந்தது. இது மிகப்பெரும் மோசடி என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இதன்பிறகு கடந்த நவம்பர் 2012ம் ஆண்டு ஹரித்துவார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.
நான்கு ஆண்டுகாலம் தொடர்ந்து நடைபெற்ற அந்த வழக்கில் கடந்த டிசம்பர் 1ம்தேதி பதஞ்சலி நிறுவனத்தின் மோசடியை உறுதிப்படுத்தி 11 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஹரித்துவார் உணவு பாதுகாப்பு அலுவலர் யோகேந்திர பாண்டே கூறுகையில், ”பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்பு பொருட்கள் என்றும் முழுவதும் ரசாயன கலப்பில்லாத இயற்கை முறையிலான உற்பத்தி என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்தது.
குறிப்பாக தேன், கடுகு எண்ணெய், அன்னாசிப்பழ ஜாம், தானிய மாவு மற்றும் அயோடின் உப்பு ஆகிய ஐந்து பொருட்கள் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இந்த ஐந்து பொருட்களையும் பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யவில்லை.
வேறு நிறுவனத் தயாரிப்புகளை வாங்கி பதஞ்சலி நிறுவனப் பொருளாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டதும் ஆதாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. அதையொட்டியே வழக்கு தொடுக்கப்பட்டது” என்றார்.