அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் நேரலையை புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோயிலில் அமைக்கப்பட்ட அகண்ட திரையில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பார்த்தனர்.
அயோத்தி ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத ராமர் சிலையின் கண்களில் இருந்த கட்டு அவிழ்க்கப்பட்டு பிறகு தாமரை மலரைக்கொண்டு பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து ராமர் கோயிலை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக புதுச்சேரி அரசு இன்று மாநிலத்திற்கு பொது விடுமுறையை அளித்தது. மேலும் புதுச்சேரியில் கோயில்கள் மற்றும் பல்வேறு பொது இடங்கள் என 300 க்கும் மேற்பட்ட இடங்களில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழாவின் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்துபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் அகண்ட திரையில் ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பபட்டது. இதை முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அமர்ந்து பார்வையிட்டனர்.