Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாநிலங்களவையில் குறைந்தது பாஜகவின் பலம்.! ஆதரவு அளிக்குமா அதிமுக..?

Rajyasabha

Senthil Velan

, திங்கள், 15 ஜூலை 2024 (16:58 IST)
மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளதால் ஆளும் பாஜகவின் பலம்  86ஆக சரிந்துள்ளது. இதனால் மசோதாக்களை தாக்கல் செய்ய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 
 
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாக வேண்டுமானால், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த ஆளும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், மாநிலங்களவையிலும் பாஜகவின் பலம் தற்போது சரிந்துள்ளது.

மாநிலங்களவையின் மொத்த பலம் 250 ஆகும். ஆனால், ஜம்மு காஷ்மீரை இரண்டு மாநிலங்களுக்கு பிரிக்கப்பட்டதால் அதன் மொத்த பலம் தற்போது 245ஆக உள்ளது. மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மாநிலங்களவையில் 233 உறுப்பினர்கள், மாநில/யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
 
மீதமுள்ள 12 பேர், நியமன எம்.பி.க்கள் ஆவர். கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் தனித்துவமாக செயலாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையில் நியமன எம்பிக்களை மத்திய அரசு தேர்வு செய்து வருகிறது. மத்திய அரசு நியமனம் செய்வதால், மசோதாக்கள் கொண்டு வரும்போது, இவர்கள் பொதுவாக மத்திய அரசுக்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்.
 
இந்நிலையில், மத்திய பாஜக அரசால் நியமனம் செய்யப்பட்ட ராகேஷ் சிங், ராம் சாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக, பாஜகவின் பலம் தற்போது 86ஆக குறைந்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 101ஆக குறைந்துள்ளது.

245 எம்.பி.க்கள் உள்ள மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 113 பேரின் ஆதரவு தேவை என்பதால், கூட்டணி கட்சிகளை தாண்டி மற்ற கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியின் பலம் 87 ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 26 எம்.பி.க்களும் மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13 எம்.பி.க்களும் டெல்லி, பஞ்சாபை ஆண்டு வரும் ஆம் ஆத்மிக்கும் தமிழ்நாட்டை ஆளும் திமுகவுக்கும் தலா 10 எம்.பி.க்கள் உள்ளனர்.
 
பாஜக தலைமையிலான கூட்டணி, இந்தியா கூட்டணி என இரண்டிலும் இணையான கட்சியாக தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளது. இக்கட்சிக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர். இதை தவிர, அதிமுக உள்ளது. பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 4 எம்.பி.க்கள் உள்ளனர்.  அதேபோல, பாஜகவை எதிர்க்காமல் சமூகமான உறவை பேணி வரும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-க்கு 11 எம்.பி.க்கள் உள்ளனர்.
 
அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், கடந்த காலத்தில் முக்கிய விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாகவே, பாஜகவால் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடிந்தது. இந்த கட்சிகளை தவிர்த்து ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சரான நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி உள்ளது. அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை போன்று பிஜு ஜனதா தளமும் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வந்தது.
 
ஆனால், ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளத்தை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைத்தது. இதையடுத்து, இனி பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட மாட்டோம் என நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். எனவே, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது.
 
மாநிலங்களைவையில் தற்போது மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நடத்தப்பட்ட 11 இடங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதில், மகாராஷ்டிரா, அசாம், பீகார் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு இடங்களும், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடமும் காலியாக உள்ளன.

 
பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அசாம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய 7 மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகள் உள்ளது. மஹாராஷ்டிராவில் தனது கூட்டணி முடிவை தொடர்ந்தால் அங்கிருந்து மேலும் இரண்டு எம்பிக்களை பெற முடியும். எனவே மாநிலங்களவையில் பலத்தைக் கூட்ட பாஜக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல ஆண்களுடன் உல்லாசம்.! கல்யாண ராணி சத்யா மீது ஆன்லைனில் குவியும் புகார்..!!