குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களே போராட்டத்தில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு குடியுரிமை சட்டத்தை அறிவித்தபோதே அசாமில் போராட்டம் தொடங்கியது. பாஜக ஆட்சி நடந்து வரும் அசாம் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகள் குடியுரிமை சட்டத்தால் பறிபோவதாக கூறப்படுகிறது. இதனால் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் பாஜக அலுவலகம், எம்.எல்.ஏக்களின் வீடுகல் சிலவற்றையும் தீக்கிரையாக்கினர்.
அசாம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏக்களே மத்திய அரசுக்கு எதிராக களம் இறங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் 13 பேர் மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர்.
குடியுரிமை சட்டத்தை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் அதே சமயம் அசாம் மாநில மக்களின் நலமும், பண்பாடும் முக்கியம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அசாம் மாநிலத்தின் அமைதி குலையாதபடி குடியுரிமை சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக எம்.எல்.ஏக்களே மத்தியில் ஆளும் தங்கள் சொந்த கட்சிக்கு எதிராக போர் கொடி தூக்கியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.