தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பதை காலம் காலமாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் பாஜகவுக்கு தாவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் அசோக் சவான் விலகுவதாக அறிவித்த நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அடுத்த நாள் அவர் பாஜகவில் இணைய இருப்பதாக வெளிவந்துள்ள தகவலை அடுத்து இன்னொரு விக்கெட் காங்கிரஸ் தரப்பில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
அசோக் சவானின் ராஜினாமா காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய தலைவராக இருக்கும் அசோக் சவான் பாஜகவில் இணைவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூடுதல் இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.