இயற்கை பேரிடர் நிதி தொடர்பாக மக்களவையில் பாஜக, திமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும், திமுக எம்.பி ஆ.ராசா, இயற்கை பேரிடரை சமாளிக்க தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பேரிடர் நிதி வழங்காமல் மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனால் திமுகவினருடன் பாஜக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பட்டியலின எம்பி ஒருவரை, திமுக எம்.பி டி.ஆர் பாலு தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிகள், டி.ஆர் பாலு பேசிய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திமுக எம்பிக்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.