சில மாதங்களுக்கு முன்னர் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையான நிலையில் மீண்டும் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் இந்தியாவை தலைமையகமாக கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த 6ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்திய விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அதில் பிஸினஸ் வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது சகபயணி சிறுநீர் கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா அளித்த விளக்கத்தில் “சம்பவத்தன்று பிஸினஸ் வகுப்பில் பயணித்த பெண் பயணி மீது சக பயணி சிறுநீர் கழித்துள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில் அவருக்கு மாற்று உடைகள், காலணிகள் வழங்கப்பட்டு வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.
விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் அந்த ஆண் பயணியை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பயணி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட பெண் கூறியதால் அவர் விடுவிக்கப்பட்டார். அவர்கள் பேசி சமரசம் செய்து கொண்டதாக தெரிந்தது. எனினும் விமான நிறுவன உள்மட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் 10ம் தேதி இரண்டாம் கட்ட விசாரணை நடக்கிறது.
சிறுநீர் கழித்த பயணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க 30 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விமான கட்டணம் திரும்ப வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்திலும் இதுபோன்ற சிறுநீர் கழித்த சம்பவம் நடந்த நிலையில் அடுத்த மாதமே மற்றொரு சம்பவம் நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.