டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அந்த கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விளக்கம் அளித்துள்ளார்.
ஆம் ஆத்மி அரசியல் தவறான மதுபான கொள்கை மற்றும் பணத்தை மையமாக கொண்டு கட்சி செயல்பட தொடங்கியது ஆகிய இரண்டும் தான் அந்த கட்சியின் தோல்விக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்னா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பணியாற்றியவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால் என்பதும், அதன் பிறகு அன்னா ஹசாரேவிடம் இருந்து பிரிந்து தான் அவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார் என்பதும் தெரிந்தது.
தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, இந்த முறை பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ள நிலையில், அன்னா ஹசாரே இது குறித்து கூறிய போது:
"ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும். தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவமதிப்புகளை கண்டு கொள்ளாமல் மக்களுக்காக பணியாற்ற வேண்டும். இதை நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன். அதுபோன்ற வேட்பாளர்களே மக்களின் நம்பிக்கையை பெற முடியும். ஆனால், ஆம் ஆத்மி இதை புரிந்து கொள்ளவில்லை. தவறான மதுபான கொள்கை, பேராசை, பணத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட கட்சியின் நிலை ஆகியவைதான் அந்த கட்சியின் தோல்விக்கு காரணம்" என்றார்.
அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva