அர்விந்த் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்து விட்டேன் : அன்னா ஹசாரே கவலை
அர்விந்த் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்து விட்டேன் : அன்னா ஹசாரே கவலை
டெல்லி முதல் அமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் அன்னா ஹசாரே ஈடுபட்ட போது அவருக்கு பக்க பலமாக இருந்தவர் அர்விந்த் கெஜ்ரிவால். அதன்பின், போராட்டங்கள் மட்டும் போதாது, நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவெடுத்தார் கெஜ்ரிவால். ஆனால், அன்ன ஹசாரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனாலும், ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, டெல்லியின் முதல்வர் ஆனார் கெஜ்ரிவால். எனினும், இரண்டாவது முறை அவர் முதல்வராக பதவியேற்ற பின் அவரது அமைச்சர்கள் மீது மோசடி புகார்கள் தொடர்ச்சியாக எழுந்தது. பலர் சிறைக்கு செல்ல நேரிட்டது.
சமீபத்தில், ஒரு பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆம் ஆத்மி அமைச்சர் சந்தீப் குமாரின் வீடியோ வெளியாகி கெஜ்ரிவாலுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், அவரின் அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கி எறியப்பட்டார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஹசாரே “கெஜ்ரிவால் என்னுடன் இருக்கும் போது கிராம ஸ்வராஜ் என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் தற்போது அவரின் நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் மீது நான் வைத்திருந்த அனைத்து நம்பிக்கைகளும் முழுமையாக பொசுங்கி விட்டன. அவரது கட்சியை சேர்ந்தவர்கள் ஊழலில் ஈடுபட்டு சிறைக்கு செல்வது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.