ஃபேஸ்புக் சாட்டிங்கில் இனிமையாக பேசி எம்.பி, எம்.எல்.ஏக்களின் மகள்கள் உள்பட சுமார் 400 பெண்களிடம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த கிருஷ்ணா என்ற பி.டெக் பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா, ஃபேஸ்புக்கில் அழகான ஆண்கள் படத்தை பதிவு செய்து அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் என இளம்பெண்களை நம்ப வைத்தார். பின்னர் அவர்களுடன் நைசாகா பேசி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.
இவருடைய இனிமையான உரையாடல்கள்களுக்கு தெலுங்கானா மந்திரி ஒருவரின் மகள் மற்றும் ஆந்திர மாநில எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மகள்கள் உள்பட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்துள்ளனர். இதுவரை இவர் ரூ.4 கோடிக்கும் மேல் பணம் பறித்து மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் கிருஷ்ணாவை தேடி வந்த போலீசார் நேற்று காக்கிநாடா ரெயில் நிலையத்தில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவரிடம் இருந்து 25 சிம்கார்டுகள் மற்றும் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மோசடி செய்த பணத்தை கிரிக்கெட் சூதாட்டம், குதிரை பந்தயம் என ஆடம்பர செலவு செய்து வந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.