உத்தர பிரதேச தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் முன்னை விட அதிக இடத்தில் வென்றிருப்பதாக அகிலேஷ் யாதவ் நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி இந்த முறை 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ் “கடந்த தேர்தலை விட வாக்கு சதவீதத்தை ஒன்றரை மடங்கு அதிகப்படுத்தி வெற்றி இடங்களை 2 மடங்கு அதிகப்படுத்திய உத்தரப்பிரதேச மக்களுக்கு எங்களின் இதயப்பூர்வமான நன்றிகள். பாஜகவின் இடங்களை குறைக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம்.
பாஜகவின் இடங்கள் தொடர்ந்து குறைக்கப்படும். இப்போது பாதிக்கும் மேற்பட்ட மாயைகள், குழப்பங்கள் தீர்ந்துவிட்டது. சில நாள்களில் மீதியும் தீர்ந்து விடும். பொது மக்களின் விருப்பத்திற்கான போராட்டம் வெற்றி பெறும்” என்று தெரிவித்துள்ளார்.