கேரள நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில், மலையாள சினிமாவின் மரியாதைக்குரிய இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் திலீப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு, மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது போலீசாரின் விசாரணை பிடியில் இருக்கிறார்.
திலீப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக பல மலையாள சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், திலீப்பிற்கு ஆதரவாக ஒரு இயக்குனர் குரல் கொடுத்துள்ளார். கேரள சினிமாவின் பழம் பெரும் இயக்குனரும், மரியாதைக்குரிய இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன்தான் அவர்.
இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் “ திலீப்பை நான் சில ஆண்டுகளாகவே அறிவேன். எனக்கு தெரிந்து அவர் கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபடும் அளவுக்கு மோசமானவரோ அல்லது திரைமறைவு தாதாவோ அல்ல. ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அது தொடர்பான விசாரணையைத்தான் கவனிக்க வேண்டும். அவர் குற்றவாளி என நாமே முடிவு செய்யக்கூடாது. திலீப் விவகாரத்தில், விசாரணை துவங்கும் முன்னரே அவரை குற்றவாளி என ஊடகங்கள் தீர்ப்பளித்துவிட்டன். இது சரியல்ல” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அடூர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திலிப் மற்றும் காவ்யா மாதவன் இணைந்து நடித்த ‘பின்னேயும்’ படம் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.