கேரளாவில் ரயிலுக்கு தீ வைத்து தப்பியோடிய நபரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆலப்புழா – கண்ணூர் இடையே சென்ற எக்ஸ்கியூட்டிவ் ரயிலில் திடீரென நபர் ஒருவர் பயணிகள் மீது பெட்ரோலை ஊற்றி ரயிலுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 3 பேர் பலியானார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ரயிலுக்கு தீ வைத்த ஷாரூக் சைபி என்ற நபரை மகாராஷ்டிராவில் உள்ள ரத்னகிரியில் போலீஸார் கைது செய்துள்ளனர். ரயிலுக்கு தீ வைத்த காரணம் குறித்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் அளித்த ஷாரூக் “சில காலமாக ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் பிறக்கும் என ஒருவர் சொன்னார். அதனால் கோழிக்கோடுக்கு ரயிலில் சென்றபோது பாதி வழியில் பெட்ரோல் வாங்கிக் கொண்டேன். பின்னர் அதை ரயில் மீதும் பயணிகள் மீதும் ஊற்றி தீ வைத்துவிட்டு வேறு பெட்டியில் ஏறி கண்ணூர் சென்றேன்” என கூறியுள்ளார். மூட நம்பிக்கையால் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.