பணி செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிப்பதை கட்டாயம் ஆக்கினால் பணியிடங்களில் பெண்களின் வேலை வாய்ப்பு பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மாதவிடாய் காலத்தில் விடுமுறை வழங்குவதை கட்டாயமாக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பொதுநல மனு கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
மேலும் மனுதாரர்களுக்கு சில கருத்துக்களையும் அறிவுறுத்தல்களையும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் பணியிடங்களில் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பெண்களை பாதுகாக்க எடுத்த முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இது அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட விருப்பம் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் மனுதாரர் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி இது தொடர்பான கோரிக்கைகளை முன் வைக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.