என்கவுன்டரில் தவறி பாய்ந்த குண்டு; உயிரிழந்த 8 வயது சிறுவன்
, வியாழன், 18 ஜனவரி 2018 (12:42 IST)
உத்தரப் பிரதேசத்தில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்ம் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது தவறுதலாக குண்டு பட்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மதுரா அருகே மோகன்புரா என்ற கிராமத்தில், பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அவர்களை சரணடையுமாறு கேட்டனர்.
இதனை ஏற்க மறுத்த கொள்ளையர்கள், போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து போலீஸாரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த மாதவ் பரத்வாஜ் என்ற 8 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். எனினும் என்கவுன்டரில் யார் சுட்ட குண்டு சிறுவனின் உடலில் பாய்ந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவனின் இறப்பிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்