உத்தர பிரதேசத்தில் சிறுமியை வன்கொடுமை செய்த நபரிடம் சமோசாவை லஞ்சமாக வாங்கிக் கொண்டு போலீஸார் அவருக்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்து பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் ஈட்டா மாவட்டத்தில் உள்ள ஜலேசர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 14 வயது சிறுமி அப்பகுதியில் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சமோசா கடை வைத்துள்ள வீரேஷ் என்ற நபர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று அவரை வாயை மூடி தூக்கிச் சென்று கோதுமை வயலில் வைத்து வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
ஆனால் அதை சிறுமி தனது தந்தையிடம் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் வீரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க சிறுமியின் தந்தை முயன்றபோது அவர்கள் வழக்குப்பதிய மறுத்ததுடன், சிறுமியின் தந்தையை சாதியை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டபோதும் அது போக்சோ வழக்காக பதியப்படாமல் இறுதி ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சிறுமியின் தந்தை கடந்த ஜூன் 27ம் தேதி, காவல்துறை விசாரணையின் மீது சந்தேகம் தெரிவித்து Protest Petition அளித்தார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் தந்தை சொன்ன தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்துள்ளன. சமோசா கடை வைத்துள்ள விரேஷிடம் தனது மகள் சமோசா கேட்டதாகவும், அதை அவர் தராததால் அவரைப் பற்றி போலி குற்றச்சாட்டை வைத்துள்ளதாகவும் போலீஸார் ரிப்போர்ட் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் நேர்மாறாக இந்த வழக்கில் போலீஸார் விரேஷிடம் 6 சமோசாக்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு எங்களுக்கு எதிராக இந்த ரிப்போர்ட்டை எழுதினார்கள் என சிறுமியின் தந்தை பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகு போலீஸார் தயாரித்த இறுதி அறிக்கையை ரத்து செய்த நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K