லட்சத்தீவு அருகே 57 பேர் நடுக்கடலில் எதிர்பாராத வகையில் சிக்கிக்கொண்ட நிலையில், இது குறித்த தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை அதிரடியாக மீட்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு மூன்று பணியாளர்கள் உள்பட 54 பேர் பேருடன் நள்ளிரவு 12:15 மணியளவில் கவரட்டியில் இருந்து சுஹேலிபர் தீவுக்கு, படகு ஒன்று புறப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி படகு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவில்லை. படகு பழுதானதால் உரிய இடம் செல்ல முடியாமல், நடுக் கடலில் அவர்கள் தவித்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து, கடலோர காவல் படைக்கு லட்சத்தீவு நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்த நிலையில், உடனடியாக கடலோர காவல் படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.
அப்போது, கவரட்டி என்ற பகுதியில் இந்திய பெருங்கடலில் பழுதான படகில் 57 பேர் இருந்ததை கண்டுபிடித்து, உடனடியாக அவர்களை மீட்டது. இவர்களில் 22 பெண்கள், 9 ஆண்கள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 20 குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பெருங்கடலில் உள்ள சுஹெலிபார் என்ற தீவு அருகே சென்றபோது தான், படகு பழுதானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.