மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சிறுவன் சுஜித் சமீபத்தில் ஆள்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழக மக்களை துயரக் கடலில் ஆழ்த்தியது
இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினார். ஒருசில தனியார் அமைப்புகளும் இதற்கு நிதி உதவி செய்வதாகவும் அறிவித்தன. சுஜித் சம்பவத்தை அடுத்து இனி ஒரு குழந்தை இதேபோன்று பலியாகி விடக்கூடாது என்பதற்காக பலர் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை மூடி பாதுகாப்பாக வைத்தனர். சுஜித் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக பல ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் நேற்று 5 வயது சிறுமி ஒருவர் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் நடந்த சுஜித் மரண சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில் மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கு மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தால் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டிருக்காது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்புப் படையினர், அரசு அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை உயிருடன் மீட்டு எடுக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர். மீட்பு பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறுமியையாவது உயிருடன் மீட்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது