லடாக்கில் ஆற்றில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஐந்து பேருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் தலைநகர் லே-வில் இருந்து 148 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இன்று அதிகாலை ராணுவ வீரர்கள் டேங்கர் மூலம் ஆற்றைக் கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 5 ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தனத்தில் பதிவிட்டுள்ள அவர், “லடாக்கில் ராணுவ டேங்க் ஆற்றைக் கடக்கும் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சலான வீரர்கள் நமது தேசத்துக்கு அளித்த முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் துயரமான இந்த நேரத்தில் தேசம் அவர்களுடன் உறுதியாக நிற்கிறது என்றும் ராஜ்நாத் சிங்தெரிவித்துள்ளார்
இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லடாக்கில் ராணுவப் பயிற்சியில் டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஆற்று வெள்ளத்தில் மூழ்கி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
வீரமரணம் அடைந்துள்ள அனைத்து வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த துயர் மிகு தருணத்தில் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்றும் வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் சேவைகளை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்று
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டுள்ளார். நமது வீரம் மிக்க ராணுவ வீரர்களின் முன்மாதிரியான சேவைக்கு தேசம் ஒன்று சேர்ந்து வணக்கம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.