தெலங்கானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் இரண்டாவது நாளில் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . தெலுங்கானா மாகாணத்தை சேர்ந்த கோவர்தன் என்பவரின் மூன்று வயது மகன் சாய்வர்தன். இந்த சிறுவன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். மீட்பு படையினர் விரைந்து வந்து அந்த சிறுவனை மீட்க போராடி வந்தனர். சிறுவனுக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் சிறுவன் உயிரிழந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தொடர்ந்து இதுபோல குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து இறப்பது வேதனைக்குரிய தொடர் நிகழ்வாக அமைந்துள்ளது.