உத்தரப்பிரதேசத்தில் பள்ளிக்கு பெயரும் புகழும் கிடைக்க வேண்டி, 2-ஆம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி இயக்குநர் உட்பட 5-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளி, மாபெரும் வெற்றி பெற்று நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என கோரி, இந்த வார தொடக்கத்தில் அந்த மாணவன் பள்ளி விடுதியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகல், அவரது தந்தை ஜஷோதன் சிங், 3 ஆசிரியர்கள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் பள்ளிக்கு வெளியே உள்ள குழாய் கிணறு அருகே சிறுவனைக் கொல்ல விரும்ப திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அந்த கும்பல் விடுதியில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும்போது, சிறுவன் கத்த ஆரம்பித்தால், அப்போது அந்த கும்பல் கழுத்தை நெறித்ததில் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது பள்ளிக்கு அருகில், மாந்திரீகம் தொடர்பான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நிதி நெருக்கடியில் இருந்த பள்ளியின் செழிப்பை உறுதி செய்வதே கொலையின் பின்னணியில் கூறப்படும் நோக்கம் எனவும் நரபலி கொடுப்பது பள்ளியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நம்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தை, டெல்லியின் ஐ.டி. ஊழியராக இருந்திருக்கிறார். கடந்த திங்களன்று விடுதி ஊழியர்கள் மற்றும் சக மாணவர்கள், இம்மாணவர் நினைவற்று இருப்பதை கண்ட நிலையில், நிர்வாகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நிர்வாகம் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல காட்டிக்கொண்டு, சிறுவனின் தந்தைக்கு ஃபோன் செய்து, உங்கள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறான் என்று கூறி சிறுவனின் தந்தையை வரச்சொல்லி உள்ளனர்.
அவர் விரைந்து சென்றபோது, குழந்தை அங்கே இல்லை. விசாரித்தபோது மருத்துவமனை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். ஆனால், குழந்தையின் உடலுடன் அந்த பள்ளி நிர்வாகத்தினரும் ஆசிரியர்களும் பல மணி நேரமாக காரில் பயணித்துக்கொண்டிருந்தது பின்னாட்களில் விசாரணையில்தான் தெரியவந்துள்ளது.வெகுநேரமாக குழந்தை எங்கே என்றே தெரியாமல் தவித்த அந்த தந்தை, உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரணையில், பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகலின் காரில் குழந்தை (உடலில் கழுத்துப்பகுதியில் காயத்துடன்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குற்றம் தொடர்பாக ஐவர் கைதான நிலையில், இச்சம்பவம் கடந்த ஞாயிறன்று நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.