கோசாலையில் 200 பசுக்கள் உயிரிழந்ததை அடுத்து சத்தீஷ்கார் பாஜக தலைவர் ஹரிஷ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் ராஜ்பூர் கிராமத்தில் பாஜக தலைவர் ஹரிஷ் வர்மாவுக்கு சொந்தமான கோசாலை ஒன்று உள்ளது. அந்த கோசாலையில் பசுக்கள் பசியாலும், மருத்துவ வசதியின்றியும் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதுவரை 200 பசுக்கள் உயிரிழந்துள்ளன. இறந்த பசுக்களின் சடலங்கள் கோசாலை அமைந்துள்ள பகுதியிலே புதைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுக்கள் உயிரிழப்பு தொடர்பாக சத்தீஷ்கர் ராஜ்ய கவ் சேவா ஆயோக் அமைப்பு காவல்துறையில் புகார் செய்தது. இதையடுத்து கோசாலையில் ஆய்வு செய்த காவல்துறையினர், போதிய அடிப்படை வசதிகள் இல்லதாதே பசுக்களின் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். தற்போது ஹரிஷ் வர்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பசுக்கள் உயிரிழப்பு தொடர்பாக ஹரிஷ் வர்மா கூறியதாவது:-
கோசாலையில் 220 பசுக்களை மட்டும்தான் பராமரிக்க முடியும். ஆனால் 650 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள ரூ.10 லட்சத்தை வழங்கக்கோரி பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தபோதிலும் எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை என்றார்.
மேலும் ஹரிஷ் வர்மா நடத்திவரும் கோசாலைக்கு அரசு நிதியுதவி வழங்குவதாக கூறப்படுகிறது.