Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 தமிழர் படுகொலை வழக்கை மூடுவதா? ராமதாஸ் கண்டனம்

20 தமிழர் படுகொலை வழக்கை மூடுவதா? அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

20 தமிழர் படுகொலை வழக்கை மூடுவதா? ராமதாஸ் கண்டனம்
, ஞாயிறு, 22 மே 2016 (13:22 IST)
ஆந்திர மாநிலம், சேஷாச்சலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டப்பட்ட வழக்கை அம்மாநிலக் காவல்துறை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
20 தமிழர்களை ஆந்திரக் காவல்துறையினர் திட்டமிட்டு படுகொலை செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி அந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற ஆந்திர காவல்துறை முயல்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வேலைக்கு சென்ற 20 பேரை கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, பல இடங்களில் பேரூந்துகளில் இருந்து இறக்கி கடத்திய ஆந்திர சிறப்புக் காவல்படையினர், ரகசிய இடத்தில் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி பின்னர் சுட்டுக் கொன்றனர்.
 
இதைத்தொடர்ந்து சேஷாச்சலம் வனப்பகுதியில் அவர்களின் உடல்களை கிடத்தி, அவர்கள் அனைவரும் செம்மரக் கடத்தல்காரர்கள் என்றும், செம்மரம் வெட்டுவதை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஆந்திரக் காவல்துறை கட்டுக்கதை எழுதியது.
 
இந்தியாவின் இந்த மிகக்கொடிய மனித உரிமை மீறலில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக ஓராண்டுக்கும் மேலாக பாமக போராடி வரும் நிலையில் தான், இக்கொலை வழக்கில் ஆந்திர சிறப்பு அதிரடிப்படையினர் மீதான குற்றச்சாற்றுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாளுக்கு ஆந்திரக் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
 
20 தமிழர்கள் படுகொலை வழக்கை விசாரித்து வரும் ஆந்திர காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கை விசாரிக்க ஆந்திர அரசு அவசர அவசரமாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்த போதே, இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட ஆந்திர அதிரடிப்படையினரை காப்பாற்ற ஆந்திர அரசு முயற்சிப்பதாக பாமக குற்றஞ்சாற்றியிருந்தது.
 
இந்த முயற்சியை முறியடிப்பதற்காகத் தான் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ஆணையிடக்கோரி பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களின் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதே கோரிக்கைக்காக தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் இந்த வழக்கை முடிக்கவே முடியாது.

ஆனால், ஆந்திர அதிரடிப்படையினரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இருந்த ஆதாரங்களை எல்லாம் அழித்து விட்டு, எந்த ஆதாரமும் இல்லை என்று இவ்வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு நாடகமாடுகிறது. இது குறித்து அக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை முடிக்கக்கோரும் மனுவை திருப்பதி விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது.
 
ஆந்திரக் காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை நிற்பது தான் கொடுமை. ஆரம்பத்தில் இருந்தே கொல்லப்பட்ட தமிழர்களை செம்மரக்கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்துவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டியது.
 
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட போது, அவர்களின் உடல்களை உடனடியாக எரிக்கும்படி குடும்பத்தினரை மிரட்டியது. இந்த சிக்கலில் பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலோ அல்லது பாமக தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்துக் கொண்டிருந்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும். ஆனால், வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டியதால் தான் ஆந்திர அரசுக்கு இந்த அளவு துணிச்சல் ஏற்பட்டுள்ளது. 20 தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த ஆந்திர அதிரடிப்படையினர் எந்த தண்டனையுமின்றி தப்புவதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது.
 
இந்த இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் மனு நிலுவையில் இருக்கும் நிலையில், இவ்வழக்குக்கு மூடுவிழா நடத்தும் ஆந்திரக் காவல்துறையின் திட்டம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பாமக நடவடிக்கை எடுக்கும்.
 
இதற்காக, பாமக வழக்கறிஞர்கள் குழு விரைவில் ஆந்திரா செல்லும். இவ்வழக்கில் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதன் மூலம் 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற கொலைகாரர்களுக்கு தக்க தண்டனையை பாமக பெற்றுத் தரும்.
 
பாதிக்கப்பட்ட தமிழர்கள் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசுக்கு இருந்தால் இவ்வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு நீதிக்காக போராட முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொன்னா... நம்புங்க பாஸ்....ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்