ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரம், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற தேசிய போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய பயிற்சி மையமாக விளங்குகிறது. நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், மருத்துவம் மற்றும் இன்ஜினீயரிங் கனவுகளுடன் இங்கு வந்து விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், கடும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், விடுதி அறைகளின் சீலிங் பங்குகளில் ஸ்ப்ரிங் அமைப்பை பொருத்தும் நடவடிக்கையை எடுத்திருந்தாலும், அது பெரிதாக பலனளிக்கவில்லை.
இந்தச் சூழலில், பீகாரைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர், நீட் தேர்வுக்காக கோட்டாவில் உள்ள ஒரு பிரபல பயிற்சி மையத்தில் பயின்று வந்த நிலையில், இன்று அதிகாலை தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்குறிப்பில், அவரது முடிவுக்கு பெற்றோர்கள் அல்லது படிப்பு காரணம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கு முன் அவர் தனது சகோதரிக்கு வாட்ஸ்அப் செய்தியையும் அனுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் இது 11வது மாணவர் தற்கொலை எனவும், கடந்த ஆண்டில் இதுபோன்ற 17 சம்பவங்கள் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.