குஜராத் மாநிலத்தில் 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் குண்டு கட்டாக தூக்கி சட்டசபையில் இருந்து சட்டசபை காவலர்களால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையில் வந்த குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தராதத்தை அடுத்து பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில் சபாநாயகரின் எச்சரிக்கை மீறி முழக்கங்களை தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுப்பி கொண்டிருந்ததை அடுத்து 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
மேலும் அவர்களை உடனே வெளியேற்ற சபைக்காவலருக்கு உத்தரவிட்டதை அடுத்து சபை காவலர்கள் 16 எம்எல்ஏக்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். இந்த சம்பவம் குஜராத் மாநில சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.