இந்திய விமானப்படையை சேர்ந்த எம்.ஐ 17 ரக விமானத்தை இந்திய ஏவுகணைதான் சுட்டு வீழ்த்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த போது இந்திய விமானப்படையை சேர்ந்த எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 வீரர்கள் மரணமடைந்தனர்.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டரை ஸ்ரீநகரில் உள்ள ஏவுகணைதளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைதான் தாக்கியது என அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லையின் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டன. பாக். விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் உடனடியாக சுட்டு வீழ்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று பறப்பது ரேடாரில் பதிவானது.
ஆனால், அது எந்த நாட்டுடையது என கண்டுக்கொள்ள உதவும் தொழில்நுட்பம் சரியாக வேலை செய்யாததால் ஹெலிகாப்டர் யாருடையது என கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், தாமதப்படுத்தாமல் இந்திய ஏவுகணை இந்திய ஹெலிகாப்டரை தாக்கியுள்ளது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த செய்தியை இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து 20 நாட்களில் இறுதி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.