நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட திருத்தங்களில் விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடும் டிரைவர்களுக்கு சிறை தண்டனை 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஓட்டுனர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் குற்றவியல் சட்டங்கள் மீதான திருத்தப்பட்ட மசோதாக்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷாசன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் மருத்துவம், போக்குவரத்து, கல்வி என பல துறைகளிலும் நடைபெறும் குற்றங்களுக்கு எதிரான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளில் மருத்துவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல போக்குவரத்துத்துறையிலும் சாலை விபத்துகளை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடும் (Hit and Run) வாகன ஓட்டுனர்களுக்கு 2 ஆண்டுகளாக இருந்த சிறை தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் உள்ள லாரி, கார் டிரைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த புதிய சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல பகுதிகளில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.