Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு - 80 லட்சம் பேர் பயன் பெறுவர்

Advertiesment
இந்தியா
, சனி, 1 மார்ச் 2014 (13:18 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
FILE

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்குவது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் ஆக மொத்தம் 80 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

7-வது சம்பள கமிஷனின் அறிவுரைப்படி, அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த சம்பளம் சுமார் 30 சதவீதம் உயரும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டு 90 சதவீதம் ஆனது. அந்த உயர்வு முன்தேதியிட்டு 2013 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இப்போது அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டு 100 சதவீதம் ஆகியுள்ளது.

வருங்கால வைப்புநிதி திட்டம் 95-ன் கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.1,000 ஆக வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 5 லட்சம் விதவைகள் உள்பட 28 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். இந்த ஓய்வூதிய உயர்வு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆகும் கூடுதல் செலவான ரூ.1,217 கோடியை வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு மத்திய அரசு வழங்கும்.

வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 9 ஆக குறைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த எண்ணிக்கையை 12 ஆக கடந்த ஜனவரி 30 ஆம் தேதி மத்திய அரசு உயர்த்தியது. அதே சமயம், மாதத்துக்கு ஒரு சிலிண்டரைத்தான் மானிய விலையில் பெற முடியும் என்றும், அதற்கு மேல் கூடுதல் சிலிண்டர் தேவைப்பட்டால் அதை சந்தை விலையில்தான் (ரூ.1,258) வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தது.

ஆனால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது. அதாவது, மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள்தான் கிடைக்கும் என்றாலும், மாதத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சிலிண்டர்களை மானிய விலையில் வாங்கிக் கொள்ள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு 21 நாட்களில் மற்றொரு சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும்.

பழங்குடியின மக்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது 2006 ஆம் ஆண்டின் வன உரிமை சட்டத்தின் கீழ் நில உரிமை பெற்ற பழங்குடியின மக்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கப்படும்.

வருகிற ஏப்ரல் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள். இவர்களில் கணிசமான பேர் சத்தீஷ்கார், ஜார்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ளனர்.

பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் எதையும் வெளியிட முடியாது என்பதால் அதற்கு முன்னதாகவே தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil