பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் உள்ள பத்மநாபர் கோவிலுக்கு பாதுகாப்பு அளிக்கும் விடயத்தில்,நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,கேரள அரசின் வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய முயன்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"உங்களது விரிவான அறிக்கைகளும், பிரமாணப் பத்திரங்களும் எங்களுக்குத் தேவையில்லை.கோவில் பாதுகாப்பை பலப்படுத்த உங்களுக்கு 3 மாத அவகாசம் கொடுத்தோம். ஆனால் நீங்கள் எதுவும் செய்யவில்லை.இது ஏற்றுக்கொள்ள முடியாதது' என்றனர்.
பத்மநாபர் கோவிலின் ரகசிய அறைகளில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றை மதிப்பிடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில், பொக்கிஷங்களுக்கு தகர்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை என்பதால் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.