123 ஒப்பந்தத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் இந்தியா விடயத்தில் நேர்ந்த வரலாற்றுத் தவறு திருத்தப்பட்டுவிட்டது என்று அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்.
123 ஒப்பந்தத்திற்கு செனட் சபையின் ஒப்புதல் கிடைத்தையடுத்து வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ரோனன் சென்,"இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. அணு சக்தி வணிகம் என்ற வகையில் மட்டுமல்லாமல் உயரிய நுட்பமான தொழில்நுட்பத்தில் இருந்தும் மிக நீண்ட காலமாக தனிமைப்பட்டு கிடந்த இந்தியாவிற்கு விடுதலை கிடைத்துள்ளது.
ஒரு வகையில் பார்த்தால் இந்தியா விடயத்தில் நேர்ந்த வரலாற்றுத் தவறு திருத்தப்பட்டுள்ளது." என்றார்.
"123 ஒப்பந்த விடயத்தில் பல நேரங்களில் நாங்கள் விரக்திக்கும் வெறுப்பிற்கும் ஆளாகி இருக்கிறோம். தற்போது மன நிறைவுடன் உள்ளோம். பிரதமர் மன்மோகன் சிங்கின் தலைமையிலான முயற்சியால் இது நடந்துள்ளது" என்றார் ரோனன் சென்.