அறிமுக இயக்குனரின் படம் என்றால் உதறத்தான் செய்கிறது. இரண்டரை மணி நேரம் போட்டுத் தள்ளிவிடுவார்களோ என்ற பயம். ஜோதி கிருஷ்ணா இரண்டு படங்களை இயக்கியவர். ஊலலலா வில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஜோதி கிருஷ்ணாவுக்கு கேர்ள் ஃப்ரெண்ட் வேண்டும் என்று முளைச்சு மூணு இலைவிடாத வயசிலேயே ஆசை. ஒருவழியாக போராடி ப்ரீத்தி பண்டாரியின் விசால மனதில் இடம் பிடிக்கிறார். அவருடன் சுற்ற ஆரம்பித்த பின் ஊரிலுள்ள எல்லா ஃபிகர்களும் ஜோதி கிருஷ்ணாவின் பின்னால் அலைய ஆரம்பிக்கிறார்கள். பட்டினி கிடந்தவனுக்கு பிரியாணி பொட்டலம் கிடைத்த மாதிரி ப்ரீத்தியை மறந்து மற்ற ஃபிகர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பிக்கிறார் ஜோதி கிருஷ்ணா. இந்நிலையில் ஜோதியை ப்ரீத்தி வெறுக்கும் அளவுக்கு மோசமான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஜோதி கிருஷ்ணா ப்ரீத்தியின் காதலை உணர்ந்து கொண்டாரா? இருவரும் இணைந்தார்களா?ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தில் வருமே அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருந்தார், அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்தார், தம்பி படித்துக் கொண்டிருந்தான். அந்த டைப் மாதிரி குடும்பம் ஹீரோவுடையது. அப்பா தலைவாசல் விஜய் பைல்ஸ் பிரச்சனைக்காரரைப் போல் எப்போதும் கத்திக் கொண்டிருப்பதும் திடீர் திடீரென்று சின்னப் பையனிடம் கேள்விக் கேட்டு அவன் ஒரு வரி கடி ஜோக்காகப் போட்டுத் தாக்குவதுமாக சின்ன பிள்ளைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சின்னப்புள்ளத்தனமாகவே எடுத்திருக்கிறார்கள். மனைவிக்கு மூளையில் கட்டி என்று தெரிந்த பிறகு மகன்களிடம் நெகிழ்ந்து பேசும் இடம் டச்சிங். படத்தின் மெச்சூர்டான பகுதி என்று இதை மட்டும் சொல்லலாம்.ரொமான்ஸ் ஏரியாவிலும் பெரியதாக ஏதுமில்லை. ஊரிலுள்ள ஃபிகர்களெல்லாம் ஜோதி கிருஷ்ணாவை மொய்க்கிறார்கள். அலைபாயுதே மாதவன் என்றால் கடித்து குதறியிருப்பார்களோ. ஹீரோவிடம் ஆக்ரோஷமாக சண்டையிடும் அடியாட்கள் ஹீரோயினிடம் அம்மாஞ்சிகளாக சண்டையிடுவது போலதான் இருக்கிறது வில்லன் கதாபாத்திரம். சிரிப்பு வில்லனாக முதல் பாதில் காட்டிவிட்டு கிளைமாக்ஸில் கையில் கத்தியை கொடுத்திருக்கிறார்கள். இவரும் இவரது ஆட்களும் ஹீரோவை குத்தோ குத்தென்று குத்த அவர் என்னவோ குண்டூசியால் குத்துப்பட்டது போல் வீறு கொண்டு ஹீரோயினைத் தேட, டி.ஆர்.தோற்றார் போங்கள்.படத்திலேயே மிகவும் பாவப்பட்ட ஜீவன் ப்ரித்தாவின் அப்பாவாக வரும் பட்டிமன்ற ராஜா. ஏறக்குறைய ஒரு செட் பிராப்பர்ட்டி மாதிரிதான் பயன்படுத்தியிருக்கிறார்கள். மகளை டாவடிக்கிற ஹீரோவைப் பார்க்கும் போதெல்லாம் இவருக்கு நெஞ்சு வலி வருகிறது. புதுவித வியாதி போல. அப்பாவிடம் பேசுகிறாரா இல்லை முன்பின் தெரியாத அங்கிளிடம் பேசுகிறாரா என்று பிரித்தறிய முடியாத வகையில் இருக்கிறது ப்ரீத்தியின் உச்சரிப்பு. நடிப்பைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பேயில்லை. இருப்பதை மட்டும்தானே பேச முடியும். வெட்டியாக திரியும் வேடம் என்பதால் ஜோதி கிருஷ்ணா பாஸாகிவிடுகிறார். கடகடவென்று டயலாக்கை எல்லாம் மூச்சு விடாமல் ஒப்பிப்பதுதான் நெருடுகிறது. மறந்துவிடும்ங்கிற பயமா?ஓ மை பாடலும் பாடலுக்கான கான்செப்டும் பரவாயில்லை. ஒளிப்பதிவு ஓகே. இந்தக் கதைக்கு இதைவிட மெனக்கெட வேண்டுமா என்று நினைத்திருக்கலாம். வேறு வழியே இல்லையென்றால் ட்ரை பண்ணலாம்.