விக்னேஷுக்கு ஈசா வாழ்வா சாவா படம். உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். பிதாமகன் சித்தன் சாயலில் வரும் அவர்தான் படத்தின் மொத்தமும்.
சுடலீஸ்வரன் என்கிற ஈசா காதலித்து கைபிடித்த மனைவி செல்வி. அவரை அந்த ஊரையே ஆட்டிப் படைக்கும் அண்ணாச்சிகள் போட்டுத் தள்ளுகிறார்கள். மனைவியின் கொலைக்கு ஈசா பழி வாங்குகிறான்.சாதாரணமாக தெரியும் கதையில் சுவாரஸியம் சேர்ப்பது அதன் கதைக்களம். உப்பள பின்னணியில் நகரும் கதை படத்துக்கு தருவது புத்துணர்ச்சி. ஒளிப்பதிவாளர் பால கணேஷின் கேமரா, காட்சிகளை தந்திருக்கும் விதம் பேரழகு. படம் நெடுக அவரோடு கைகோர்த்து வருகிறது ஹரனின் இசை.வெள்ளந்தியாக வரும் விக்னேஷ் உப்பளத்தின் விசுவாச ஊழியர். அவருக்கு அதே உப்பளத்தில் வேலை பார்க்கும் லக்சனா மீது காதல். காதலை சொல்ல விக்னேஷ் தயங்குவது கண்டு லக்சனாவே காதலை முந்திக் கொண்டு சொல்வது அழகு. லக்சனாவின் கொலைக்குப் பிறகு எல்லாமே மாறிவிடுகிறது. அண்ணாச்சிகளை விக்னேஷ் கொலை செய்வது படத்தின் டெம்போவை அதிகரிக்கிறது. லக்சனா ஏற்கனவே இறந்துவிட்டார், விக்னேஷ் இதுவரை பேசிக் கொண்டிருந்தது அவரது பிணத்துடன் என்பதை இயக்குனர் ஓபன் பண்ணுமிடத்தில் திரைக்கதை மிளிர்கிறது. அரசு அதிகாரியை குடும்பத்துடன் ஜஸ்ட் லைக் தட் கொலை செய்யும் வில்லன், வில்லனுக்கு துணை போகும் போலீஸ் என்று மைனஸ் பாயின்டுகளும் நிறைய. விக்னேஷின் நண்பனாக வரும் சிங்கம்புலி நிறைவான நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் அண்டு கோ-வின் காமெடியில் சிரிப்பு குறைவு.
விக்னேஷின் முறுக்கித் திரியும் பாடிலாங்வேஜ்தான் அவரது பிளஸ்ஸும் மைனஸும். லக்சனா உப்பள பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் கொலை செய்யப்படும் போது திரையரங்கே உச் கொட்டுகிறது. அண்ணாச்சிகளாக வரும் தூத்துக்குடி ராஜேந்திரன், பிரசாத், அருண் பேச்சிலேயே உருட்டி மிரட்டுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக சாகடிக்கப்படும்போது ரிலாக்ஸாகிறது ஜனம்.பழி வாங்கும் கதையை பரபரப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலகணேசா. பாலா போல படமெடுக்க ஆசைப்பட்டு அவர் தாண்டியிருப்பது பாதி கிணறு. ஈசா... முதலுக்கு மோசமில்லை.