Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மணி - திரைவிமர்சனம்

அம்மணி - திரைவிமர்சனம்
, சனி, 15 அக்டோபர் 2016 (13:05 IST)
லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கம் மற்றும் நடிப்பில், கே-வின் இசையில், இம்ரான் அஹமத் ஓளிப்பதிவில், ஸ்ரீபாலாஜி, நிதின் சத்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் அம்மணி.

 
அரசு மருத்துவமனையில் துப்புறவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இரண்டு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் என கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார். முத்த மகன் ஸ்ரீபாலாஜி குடிகாரன். இளைய மகன் நிதின் சத்யா பணத்தாசை பிடித்த ஆட்டோ டிரைவர். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். 
 
அதே வீட்டின் சிறிய அறையில் வாடகைக்கு குடியிருக்கிறார் குப்பை பொறுக்கும் 80 வயதை தாண்டிய, அம்மணி. அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள். லட்சுமி ராமகிருஷ்ணனின் பெரிய இன்ஸ்பிரேஷன் அம்மணி.
 
இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. 
 
இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டை விட்டு விரட்டுகிறான்.
 
இதனால் மனமுடைந்து போகும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த சூழ்நிலையை சமாளித்து எவ்வாறு அம்மணியாக மாறுகிறார் என்பது படத்தின் மீதிக்கதை.
 
ரயில்வே தண்டவாளத்தை ஓட்டியும், கூவம் கரையிலும் சின்னதாகச் சொந்த வீடு கட்டி வாழும் மக்களின் வாழ்க்கையையும், வலியையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறது இப்படம். 
 
படம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மெருகேறியிருக்கிறார்.
பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. 
 
அம்மணி பாட்டியாக வரும் சுப்புலட்சுமி பாட்டியின் துறு துறு நடிப்பும் நம்மை கவர்கிறது. லட்சுமி ராமகிருஷ்ணனின் இளைய மகனாக வரும் நிதின் சத்யாவின் நடிப்பும் அழகாக இருக்கிறது. எமதர்ம ராஜாவாக வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் ரோபோ சங்கர் சிறப்பு.
 
கே வின் பின்னணி இசையும், இம்ரான் ஹமத்தின் ஒளிப்பதிவும் படத்தை தரம் உயர்த்தியிருக்கிறது. அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.
 
மொத்தத்தில் ‘அம்மணி’ ஒரு தாயின் வலி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குத்துப்பாடலில் கலக்க வரும் டி.ஆர், விஜய் சேதுபதி!!