கமல்ஹாசன், அமலா நடித்த பேசும் படம் திரைப்படத்திற்கு பின்னர் வசனமே இல்லாமல் வெளிவந்த ஒரு த்ரில் படம் தான் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி. இப்படி ஒரு படம் இயக்குவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் என்பதும் அந்த துணிச்சல் இளைஞர் கார்த்திக் சுப்புராஜிடம் அதிகம் இருக்கின்றது என்பதையும் நிரூபித்த படம் இது
வாய் பேச முடியாத, காது கேட்காத ஐந்து நண்பரகளுக்கும் பார்வையில்லாத ஒருவனுக்கும் நடைபெறும் தவறான போர்தான் இந்த மெர்க்குரி படம். காது கேட்காத, வாய் பேச முடியாத இந்துஜா உள்பட ஐந்து நண்பர்கள் காட்டு பகுதி ஒன்றுக்கு பிக்னிக் செல்கின்றனர். இந்துஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அந்த நால்வரில் ஒருவர் தன்னுடைய காதலை கூற, இந்துஜாவும் அந்த காதலை ஏற்று கொள்கிறார். பின்னர் வெற்றி பெற்ற காதலை கொண்டாட ஐந்து பேரும் இரவில் காரை எடுத்து கொண்டு காட்டு பகுதிக்கு செல்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்பட்டு, அந்த விபத்தில் பிரபுதேவா சிக்குகிறார். இதன் பின்னர் இந்த ஐந்து பேரும் சந்தித்த விளைவுகள், விபத்தில் சிக்கிய பிரபுதேவா யார்? என்பதை த்ரில்லுடன் சொல்லும் கதைதான் மெர்க்குரி படத்தின் மீதி கதை
முதல் பாதியில் காது கேட்காத வாய் பேச முடியாத நண்பர்கள் அறிமுகத்துடன் தொடங்கும் படம் விபத்துக்கு பின்னர் வேகமெடுக்கின்றது. பிரபுதேவா லேட்டாக வந்தாலும் படத்தின் உயிர் நாடியே அவர்தான். அவரது ஒவ்வொரு அலறலும் தியேட்டரில் பார்வையாளர்களை பயமுறுத்துகிறது. நடனமே இல்லாமல் வெறும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் பிரபுதேவா
இந்துஜா உள்பட ஐந்து நண்பர்களின் நடிப்பும் சூப்பர். இந்த படத்தில் வசனம் இல்லை என்ற குறையே தெரியாமல் அனைவரும் சைகை மொழியில் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸில் நடந்த தவறுக்காக பிரபுதேவாவிடம் மன்னிப்பு கேட்கும் இந்துஜாவின் நடிப்பும், அதன்பின்னர் பிரபுதேவா கூறும் பிளாஷ்பேக்கும் எதிர்பாராத திருப்பம்.
திரைக்கதை, காட்சி அமைப்புகள், நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த இந்த படத்தில் சொதப்பிய ஒரே நபர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டுமே. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இரைச்சல் அதிகம். இந்த படம் வசனம் இல்லாத படம் மட்டுமின்றி பல இடங்களில் பின்னணி இசையும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும். மேலும் முதல் பாதியில் சப்டைட்டில் ஏன் போட்டார் என்பது கார்த்திக் சுப்புராஜூக்கே வெளிச்சம்.
மொத்தத்தில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக பார்க்கலாம்.