Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (00:28 IST)
கதையே இல்லாமல் ஒரு படம் என்று விளம்பரம் செய்தாலும் இதில் கதை இருக்கிறது. கதையைத் தேடுவதையே ஒரு படமாக எடுத்து, கலைடாஸ்கோப்பை உருட்டி விளையாடியிருக்கிறார் பார்த்திபன். அதில் நறுக், சுருக், நக்கல், நையாண்டி என எல்லாவற்றையும் கலந்து கட்டி, பிலிம் ரோல்களாலேயே ஒரு தோரணம் கட்டியிருக்கிறார்.
 
உலகப் பிரச்சினைகளை எல்லாம் தொட்டுச் சலித்துவிட்டதாலோ என்னவோ, சினிமா எடுப்பவர்கள் தங்களின் சிக்கல்களையே படமாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான ஜிகர்தண்டா, சினேகாவின் காதலர்கள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஆகிய மூன்று படங்களிலுமே திரையுலகம் முக்கிய களமாய் இருக்கிறது. 
 
கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் புதுமுக இயக்குநர், ஒரு ரவுடியின் கதையைப் படமாக எடுப்பது கதை என்றால், முத்துராமலிங்கனின் சினேகாவின் காதலர்களில் கதாநாயகியின் மூன்று காதலர்களில் ஒருவராக வருபவர், பட வாய்ப்புத் தேடும் உதவி இயக்குநர். இப்போது பார்த்திபனின் க.தி.வ.இ. படத்திலும் முதல் வாய்ப்பினைத் தேடும் இயக்குநர் ஒருவரே கதாநாயகன். 
 
இந்த இயக்குநர் சந்தோஷ், தன் உதவி இயக்குநர்களுடன் கதை விவாதம் நிகழ்த்துவதும் கதையை உருவாக்குவதும் தயாரிப்பாளரிடம் கதையைச் சொல்வதும் அதைத் தயாரிப்பாளர் ஏற்றாரா என்பதும்தான் இப்படத்தின் முக்கிய கதை. ஆனால், இயக்குநரின் காதல் மனைவி, உதவி இயக்குநர்கள் சொல்லும் காட்சிகள், எதிர்வீட்டுப் பெண்ணின் காதல் தூது, மர்மமாய் நிகழும் ஒரு கொலை, திரைப்படத்துக்குள் எடுக்கப்படும் இன்னொரு திரைப்படம்.... எனப் பல துணைக் கதைகள், இந்தப் படத்தில் உண்டு.

webdunia
 
திரையுலகை உள்ளது உள்ளபடி காட்ட முயல்வது, அதன் மீது பல்வேறு விமர்சனங்களைப் பலர் வாயிலாக முன்வைப்பது, அதன் நம்பிக்கைகள் பலவற்றை உடைப்பது எனப் பல கோணங்களில் பார்த்திபன் பயணிக்கிறார். 
 
முதல் பாதியில் திரைப்படத்தில் பல முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே போய், அடுத்த பாதியில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்த்துக்கொண்டே வருவதை, திரைப்படத்தின் இலக்கணங்களில் ஒன்றாக இப்படத்தில் முன்வைக்கிறார்கள். அடுத்த காட்சி என்னவென்று தெரியாத வகையில் டுவிஸ்ட் (Twist), திடீர் திருப்பம், முடிச்சு ஆகியவை அமைய வேண்டும். அவை முன்கூட்டியே தெரிந்துவிட்டால், படம் ஓடாது, ரசிகர்களைக் கவராது என்பது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை. ஆனால், அதைப் பார்த்திபன் நம்பவில்லை. 
 
இந்தப் பாத்திரம், அடுத்து இப்படித்தான் ஆகப் போகிறது என முன்கூட்டியே காட்டிவிட்டுக் கதையை நகர்த்துகிறார். சில பாத்திரங்களின் உள்ளுணர்வை (Intuition) இதற்கு அவர் பயன்படுத்துகிறார். ஆனால், எல்லா உள்ளுணர்வுகளும் அப்படியே பலிக்காது. அதற்கான வாய்ப்பு 50 - 50 என்றும் சொல்கிறார். ஆக, அந்த உள்ளுணர்வு பலிக்குமா, பலிக்காதா என்பதே இயக்குநர் வைக்கும் மர்ம முடிச்சு. இது, ஒரு பலவீனமான புள்ளி என்றாலும் வசனங்களின் மூலம் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறார்.

கொய்யாப் பழத்தைக் கையில் வைத்திருக்கும் பெண், "இது கொய்த பழம் தான்; கொய்யாப் பழம், மரத்தில் தானே இருக்கும்" என்கிறார். எதிர்வீட்டில் இருந்தபடி ஒருதலையாய்க் காதலிக்கும் பெண், நாயகனிடம் வந்து, "நீ அழிப்பாய் என்று எதிர்பார்த்து இன்று லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்" என்கிறார். அவரது காதல் கடிதத்தில் 'இறுமாப்பு' என்ற வார்த்தையை 'இரு மாராப்பு' எனத் தவறாகப் படிக்கிறார் நாயகன். இப்படியாக, படம் முழுதும் வசனங்களில் பார்த்திபன் ஒரு வாண வேடிக்கையே நடத்தியிருக்கிறார்.
 
பார்த்திபனுக்கு அடுத்தபடியாக, தம்பி ராமையா இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். இரண்டு மனைவிகளைக் கொண்ட உதவி இயக்குநராய், 58 வயதிலும் திரைத் துறையை நம்பிக் காத்திருக்கும் அவர், குணச்சித்திரத்திலும் நகைச்சுவையிலும் அசத்தியிருக்கிறார்.
 
தாலி என்பது என்னவென்றே ஒருவருக்குத் தெரியாது என்று சின்னத்தம்பியில் பி.வாசு காட்டியதும் ஒரு ஈ பழி வாங்கும் என ராஜமவுலி நான் ஈ படத்தில் காட்டியிருப்பதும் உலகில் இல்லாத மிருகத்தை இருப்பதாக நம்ப வைத்து ஸ்பீல்பர்க் ஜூராசிக் பார்க் படத்தை வெற்றிப் படமாக எடுத்ததும் என இயக்குநர்களின் திறமைக்கு உதாரணங்களாக அவர் எடுத்து வைக்கும் உதாரணங்கள் ரசிக்கும்படி உள்ளன.
 
அது போலவே, தேவர் பிலிம்ஸ் உள்பட, பழைய கிளாஸிக் படங்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டும் ஒவ்வொன்றும் மிக அருமை. இன்றைய தலைமுறையினருக்கு அவற்றுள் பலவும் புதுமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

webdunia
 
படம் எப்படி இருக்க வேண்டும் என இந்தப் படத்தில் பலரிடமும் கருத்துக் கேட்டுள்ளது, நல்ல முயற்சி. மக்களின் பல வகையான எதிர்பார்ப்புகளை இதன் மூலம் வெளிப்படுத்திய இயக்குநர், வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் திரைத் துறையை விமர்சிக்கிறார். "படத்தைப் பார்க்காமலேயே வெளியிட்டுருவீங்களா? அப்புறம் ஏன் இவ்வளவு மோசமா இருக்குது?" என்ற விமர்சனம் அதில் ஒன்று.
 
படத்தில் வாய்ப்பு தேடும் இயக்குநரின் மனைவியாக நடித்திருக்கும் அகிலா கிஷோரும் அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சுசித்ராவும் மனத்தில் பதிகிறார்கள். அகிலா தான் வேலைக்குச் சென்று, கணவரின் கனவு நிறைவேற உதவுகிறார். ஆனால், தன் பிரைவஸி போய்விட்டதாகப் பின்னர் சண்டை போடுகிறார். ரொமான்ஸ் காட்சிகளில் அவர் பளிச்சென்று கவர்கிறார். அவரது பாதத்தைக் கணவரான இயக்குநர் பிடித்துவிடும்போது, "இதுதான் டைரக்டர் டச்சா?" எனக் கேட்பது 'டைமிங்' வசனம்.
 
இயக்குநராக நடித்திருக்கும் சந்தோஷூக்கு மலையாள முகவெட்டு. கதாநாயகனாக அளவோடு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். 
 
ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு, பளிச். கலை, வளமாக உள்ளது. பின்னணி இசை நன்று. படத்தில் ஆர்யா, அமலாபால் தொடங்கி, மிகப் பெரிய எண்ணிக்கையில் நட்சத்திரப் பட்டாளமே கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறது. 
 
படத்தின் இறுதியில், 'அடுத்த சீன் என்னவென்று தெரிந்துவிட்டால் வாழ்க்கையே போருடா' என ஒரு பாடல் வரி வருகிறது. ஆனால், இந்தப் படத்தில் இடையிடையே உள்ளுணர்வு மூலமாகப் பல காட்சிகளை இயக்குநர் முன்கூட்டியே காட்டுகிறார். இது ஒரு சிறிய முரண் என்றாலும், இதற்குக் காரணங்கள் வெவ்வேறு.
 
பார்த்திபன், ஒரு புதுமைப் பித்தன். படம் பார்த்த பிறகு நீங்கள் உணரப் போவது புதுமையா? பித்து நிலையா? என்று கேட்டால், அதற்கும் பதில் 50 - 50 தான்.
 

Share this Story:

Follow Webdunia tamil