Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்

Advertiesment
ஜிகர்தண்டா - திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்

, திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (07:00 IST)
ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு தாதா படம் வேண்டும் எனக் கேட்கும் தயாரிப்பாளருக்காகப் புதுமுக இயக்குநர் எடுக்கும் படம்தான், ஜிகர்தண்டா. இதை ரசிக்க ரசிக்க எடுத்திருப்பதில் தான், இயக்குநர் கார்த்திக் சுப்புரா‌ஜின் திறமை இருக்கிறது. இவர், பீட்சா படத்தை இயக்கி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது, ஜிகர்தண்டா மூலம் இன்னொரு படி மேலே ஏறியிருக்கிறார். பற்பல திருப்பங்களுடன் முதல் பாதியில் ஒரு வகை அனுபவத்தையும் பிற்பாதியில் வேறோர் அனுபவத்தையும் அளித்து, கலக்கியிருக்கிறார் இயக்குநர். 
 

 
சித்தார்த், ஒரு குறும்பட இயக்குநர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது படத்தை இரண்டு நடுவர்களில் ஒருவரான நாசர், குப்பைப் படம் என்கிறார். இன்னொரு நடுவரான தயாரிப்பாளர் நரேன், அது மிகச் சிறந்த படம் என வாதிடுகிறார். அத்துடன், அவரது முழு நீளப் படத்தைத் தானே தயாரிப்பதாகவும் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆனால், பின்னர் அலுவலகம் வரும் சித்தார்த்திடம் மேற்படி தாதா பட நிபந்தனையை விதிக்கிறார்.
 
இதற்காக, செத்துப் போன பழைய தாதாக்களின் கதையை மீண்டும் எடுக்க விரும்பாமல், உண்மையான தாதாவின் கதையையே படமாக எடுக்கலாம் எனச் சித்தார்த் முடிவு செய்கிறார். அப்படித் தேடும்போது, அசால்ட் சேது என்ற பெயரில் மதுரையில் இருக்கும் சிம்ஹாவைப் பற்றி அறிந்து, அவரது கதையை முழுவதும் தெரிந்துகொள்வதற்காக அங்கே செல்கிறார். சேதுவின் பெயரைக் கேட்டால் மதுரை அலறுகிறது. அவரைப் பற்றி எழுதிய பத்திரிகையாளரை உயிருடன் எரித்துக் கொல்கிறார். அத்தகையவரை எப்படி சித்தார்த் அணுகினார்? படத்தை எடுக்க முடிந்ததா? தயாரிப்பாளரைத் திருப்தி செய்ய முடிந்ததா? என்பதே மீதிக் கதை. 
webdunia
ஓர் இயக்குநராக நடித்திருக்கும் சித்தார்த், கதைக்காக இவ்வளவு மெனக்கெடுவது அவரது ஈடுபாட்டைக் காட்டுகிறது. ரவுடி சிம்ஹாவின் கதையைத் தெரிந்துகொள்வதற்காகப் படாத பாடு படுகிறார். அதற்காகவே ரவுடிக்குச் சமைத்துப் போடும் அம்பிகாவின் மகளாக வரும் லட்சுமி மேனனின் காதலை ஏற்றுக்கொள்வது போல் நடிக்கிறார். குருவம்மா கதையைச் சொல்லும் பெட்டிக் கடைக்காரரின் அறுவையைச் சகித்துக்கொள்கிறார். அதிரடி படத்தின் கதாநாயகனாக இருந்தாலும் அவர் எந்த அடிதடியிலும் இறங்காமல் மென்மையாக நடித்திருக்கிறார். இயல்பான அவரது நடிப்பு, படத்திற்கு வலுவூட்டுகிறது.
 
மேலும்
webdunia

ரவுடியாக வரும் பாபி சிம்ஹா, பட்டையைக் கிளப்பியிருக்கிறார். பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டுவதாகட்டும், அர்த்தமற்ற ஒலிகளில் உணர்வை வெளிப்படுத்தும் ஜிப்ரீஷ் மொழியைக் கற்றுக்கொள்வதாகட்டும், தன்னைக் கொல்ல வந்தவனையும் டைட்டானிக் நாயகி முகமூடியை அணிந்து சுட்டுக் கொல்வதாகட்டும் ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக முத்திரை பதிக்கிறார். 
 
படம் முழுக்க, அங்கங்கே நகைச்சுவை இயல்பாக அமைந்திருக்கிறது. சித்தார்த்தின் மதுரை நண்பனாக வரும் கருணாகரன், வளையல் கடை நடத்திக்கொண்டே நகைச்சுவையில் கலகலப்பு ஊட்டுகிறார். தான் எடுக்கும் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என ஆசை காட்டி, சித்தார்த் அவரைக் கவிழ்ப்பது ருசிகரம். என்ன கத்தியாலேயே மிரட்டிக்கிட்டிருக்கீங்க, துப்பாக்கியாலே மிரட்டுங்க என ரவுடிக்கு இவர் யோசனை கொடுப்பதும் அதன் விளைவும் சிரிப்பூட்டக் கூடியது. இவர் மட்டுமல்லாது, வேறு பலரிடமும் நகைச்சுவை வெளிப்படுகிறது. 
 
செக்ஸ் படங்களைப் பார்க்கும் ரவுடியின் கையாளுக்கு ஜப்பான், கொரியா என ஒவ்வொரு நாட்டுப் பட குறுந்தகடுகளாகக் கொடுத்து, உலக சினிமாவைக் காட்டுவதும் வேட்டையாடு விளையாடு படத்தின் பெயரில் மேட்டர் படத்தின் சிடியைக் கொடுத்துச் சிக்குவதும் உதாரணங்கள். சாவு வீட்டில் பிணத்தின் அருகே அழும் பெண்மணியின் நடிப்பு அருமை. 

விஜய் சேதுபதி, கௌரவ வேடத்தில் நடித்திருந்தாலும் அவர் பேசும் ஒரு வசனம் 'நச்'. வேறு 'ஏரியா'ப் பெண்ணை நண்பன் 'சைட்' அடிக்க, அவருக்குத் துணையாக விஜய் சேதுபதி வருகிறார். அந்தப் பெண்ணின் அண்ணன் வந்து, "உங்க ஏரியாவுல பொண்ணே இல்லையா?" என்று கேட்க, "உங்க ஏரியாவுல தான் ஆம்பளைங்க இல்லைன்னாங்க, அதான் வந்தோம்" என முரட்டு அடி அடிக்கிறார்.
 
'என்னை யூஸ் பண்ணிக்கிட்டியா?' எனக் கேட்கும் லட்சுமி மேனனுக்கு அதிகக் காட்சிகள் இல்லாவிட்டாலும் தனக்கு அளித்த பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார். சேலைத் திருடியாக அவர் வருவதும் சேலையை மட்டுமே திருடுவது என்பது கம்பெனி பாலிசி என்பதும் வேடிக்கையான காட்சிகள். அவர் சித்தார்த்துக்கு லுக் விடுவது வரை சரிதான். ஆனால், அதிகம் பழகியிராத ஒருவருக்குப் பெண்கள் லவ் லெட்டர் கொடுப்பார்களா, என்ன? அதுவும் மதுரையில். 
 
'கண்ணம்மா கண்ணம்மா' பாட்டும் கிணற்றுக்குள் வைத்த குத்துப் பாட்டும் அருமை. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, படத்திற்கு நல்ல துணை. ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. படம், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இதை இன்னும் சற்று சுருக்கியிருக்கலாம். குருவம்மா கதை சொல்லும் பெட்டிக் கடைப் பெரியவரின் காட்சிகளை நீக்கினால், படத்திற்கு அதனால் பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடாது. எனினும் மூன்று மணிநேரப் படமாக இருப்பதால் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. படத்துடன் ஒன்றிப் பார்க்க முடிகிறது.
 
தன்னுடன் இருக்கும் வேவு பார்ப்பவனை ஸ்கெட்ச் போட்டுக் கொல்லும் அளவுக்குப் புத்திசாலித்தனம் உள்ள சிம்ஹா, தனது கதை முழுவதையும் யார் யாரை எங்கே எப்படிக் கொன்றான் என்பதை வீடியோவில் பதிவு செய்வதற்கு எப்படிச் சம்மதித்தான் என்பது மட்டுமே சிறு நெருடல். மற்றபடி, படம் செம.
 
படத்தின் இறுதியில் 'மணிரத்னத்தின் போன் நம்பர் இருக்கா?' என்ற வசனம் ஒலிக்கும். விரைவில் கார்த்திக் சுப்புரா‌ஜின் எண்ணைக் கேட்கும் காலம் வரும்.
 
சன் டிவி பாணியில் முடிப்பதானால், ஜிகர்தண்டா, புதிய ருசி.

Share this Story:

Follow Webdunia tamil