Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாதுரை - திரைவிமர்சனம்

Advertiesment
அண்ணாதுரை - திரைவிமர்சனம்
, சனி, 2 டிசம்பர் 2017 (12:41 IST)
அறிமுக இயக்குனர் ஜி.சீனிவாசன் இயக்கத்தில் முதல்முறையாக அண்ணாதுரை படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதில் அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி, தனது காதலியின் மறைவால் அவளது  நினைவில் குடிப்பழக்கத்துக்கும் அடிமையாகிறார்.
எப்போதும் காதலியின் நினைவிலேயே இருக்கும் அண்ணாதுரை, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஆனால் அண்ணாதுரை மீது ஜுவல் மேரிக்கு காதல் வர அதை ஏற்க மறுக்கிறார் அண்ணாதுரை. மறுபுறத்தில் தம்பிதுரையாக  வரும் மற்றொரு விஜய் ஆண்டனி அமைதியானவராக இருக்கும் அவர் பி.டி மாஸ்டராக வருகிறார். அவருக்கு, டயானா  சாம்பிகாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், திருந்தி வாழ முடிவு செய்யும் அண்ணாதுரை, ஜுவல் மேரியை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறார். அதற்கு முன்னதாக தனது குடிப்பழக்கத்தை விட முடிவு செய்து, பாருக்கு செல்லுமிடத்தில் எதிர்பாராத விபத்து ஒன்றில்  ஒருவர் உயிரிழக்கிறார். அதற்கு பொறப்பேற்று அண்ணாதுரை சிறைக்கு செல்கிறார். பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு ஜெயிலில்  இருந்து வெளியே வரும் அண்ணாதுரை, சிறை வாசலில் ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்யப்படுவதை பார்க்கிறார்.  அந்த கொலையை செய்வது தனது தம்பி என அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
 
அண்ணாதுரை ஜெயிலில் இருந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன? அமைதியாக இருக்கும் தம்பிதுரை கொலைகாரனாக மாறியது எப்படி? அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது? அவரது குடும்பம் என்னவானது? அண்ணாதுரை ஜுவல் மேரியுடன்  சேர்ந்தாரா? தம்பிதுரை டயானா சாம்பிகாவை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. 
 
அண்ணன், தம்பி என முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி வழக்கம் போல தனது எதார்த்த  நடிப்பால் ரசிக்க வைக்கிறார். சில காட்சிகளில் கண்களில் நீர் வரவழைக்கிறது. ரவுடி, பொறுமையானவன், காதலன், மகன் என  பல்வேறு கோணங்களில் அவரது நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. இரண்டு வேடங்களிலும் நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருப்பது பாராட்டக்குரியது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். அதுபோல், விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பும் சிறப்பாகவே உள்ளது. எடிட்டிங்கிலும் கலக்கி இருக்கிறார் விஜய் ஆண்டனி.
 
டயானா சாம்பிகாவுக்கு இது முதல் படம் என்றாலும் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஜுவல் மேரி ரசிகர்களை கவரும்படியாக நடித்திருக்கிறார். காளி வெங்கட் காமெடியில் கலக்கியிருக்கிறார். ராதாரவி, தனது கதாபாத்திரத்தை நன்றாக செய்துள்ளார்.  டயானா சாம்பிகாவின் அப்பாவாக வரும் செந்திலின் நடிப்பும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது.  கே.தில்ராஜின் ஒளிப்பதிவில்  காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
 
வழக்கம் போல வரும் அண்ணன், தம்பி கதை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஜி.ஸ்ரீனிவாசன். அடுத்து என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கதையை கொண்டு சென்ர விதம் அருமை. விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. ஒருவனை சந்தர்ப்ப சூழ்நிலையில்  எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதைமிக அழகாக காட்சிபடுத்திய விதம் அருமை.
 
மொத்தத்தில் `அண்ணாதுரை' அனைவரும் விரும்பும் துரையாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஞ்சலினா ஜோலியா இது?? வைரலாகும் கொடூர புகைப்படம்!!