Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவி குமார்- விமர்சனம்

Advertiesment
ஆவி குமார்
திகில் படம் பார்க்கப் போகிறோம் என்று மட்டும் தயவு செய்து படம் பார்க்க சென்று விடாதீர்கள். ஆவியுடன் பேசும் வித்தையைக் கொண்டு இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் காண்டீபன்.


 

மலேசியாவில் ஆவிகளுடன் பேசும் திறமை வாய்ந்த குமார் (உதயா) ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போது அவர் ஆவியுடன் பேசுவதை அங்குள்ள போலீஸ் அதிகாரி (நாசர்) இதெல்லாம் உண்மையில்லை, யாரும் நம்பிடாதீங்க. வருமானத்திற்காக இந்த டிவி நிகழ்ச்சியை பரபரப்பாக நடத்துறாங்க என அங்குள்ள பார்வையாளர்களிடம் சொல்ல, அதைக் கேட்ட குமார் அது பொய் அல்ல உண்மை தான் என வாதிடுகிறார். அப்படியயன்றால் உன்னால் ஒரு கொலையை துப்பு துலக்க முடியுமா? என சவால் விடுகிறார். அது என் வேலை அல்ல என்று முதலில் மறுப்பு தெரிவிக்கும் அவர் கடைசியில் டிவி நிகழ்ச்சியில் செய்து காட்டுகிறேன் என்று சம்மதம் தெரிவிக்கிறார்.

அடுத்த நிகழ்ச்சியில், கொலையுண்டவரின் சட்டையைக் கொண்டு நாசர் வைக்க, அதைக் கொண்டு கொலையானவரின் ஆவியுடன் தொடர்பு கொண்டு கொலைகாரனின் பெயர், அங்க அடையாளங்களுடன்  துல்லியமாக கூற, அவனது கொலைக்குக் காரணமானவன் யார் என நாசர் கேட்க, அவன் கொலைக்குக் காரணமானவனின் பெயரையும் ஆவிகுமார் கூற, அது மட்டும் போலீஸ் வழக்கில் இல்லாத பெயராக இருக்கிறது. உடனே நாசர் ஆவிகுமாரை தனது நண்பரைக் கொண்டு துப்பறிய செய்கிறான். இதற்கிடையில் மலேசியாவில் ஆவிகுமாருக்கு அவனது உறவினர்கள் பெண் தேட முடியாமல் திணற (வரும் பெண்கள் எல்லாம் இவர் எத்தனை ஆவியுடன் தொடர்பு வைத்துள்ளாரோ என பயந்து ஓடுகின்றனர்!)

மனமுடைந்த குமார், தனது நண்பன் ஜெகன் உதவியுடன் கடற்கரையோரம் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடு எடுத்து குடியேறுகிறான். அந்த வீட்டின் மேலறைக்கு மட்டும் செல்லாதீர்கள் என வீட்டு உரிமையாளர் கூற, குமாருக்கு அங்கு என்ன தான் இருக்கும் என பார்க்க ஆவல் வருகிறது. உடனே அங்கு சென்று பார்க்கும் போது ஒரு அழகான பெண் படுத்து உறங்குகிறாள். அவள் வேறு யாருமல்ல. சாட்சாத் நம் கதையின் நாயகி ஆவியாக வரும் கனிகா திவாரிதான். பார்க்க நயன் தாராவின் அசல் போல் உள்ளார்.
 

கனிகா திவாரியை பற்றி விசாரிக்கும் குமாருக்கு அவர் தரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தான் யார் என்றே தெரியவில்லை என்றும் தான் சாகவில்லை என்றும் கூறும் ஆவி கனிகா தன்னை யார் என்று அடையாளம் கண்டுபிடித்து தருமாறு அவனிடம் வேண்டுகிறாள். இதையடுத்து அவள் யார் என்று புலன் விசாரணையை தொடங்கும் ஆவிகுமார் மீது காதல் வயப்படுகிறார் உதயா. ஆவியும் தான் முத்தம் கொடுத்து தானும் நாயகனை காதலிக்கிறேன் பார் என்கிறது. ஆவிகுமாரின் புலன் விசாரணையின்படி பெயர் அபிராமி என்றும் அவள் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் தான் கொலைசெய்யப்பட்ட டாக்டர் ராஜேந்திரனும் பணிபுரிந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

மருத்துவமனை சார்பாக நடக்கும் ஒரு சிகிச்சை முகாமில் வந்துள்ள பெரும்பாலோனோருக்கு தோல் வியாதி இருப்பதைக் கண்டு அதற்கான காரணம் அருகில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் தான் என்பதை அறிகிறாள் டாக்டர் அபிராமி. அதற்கான ரிப்போர்ட்டை தொழிலதிபரிடம் கூற, அவர் ராஜேந்திரனையும், அபிராமியையும் கொலை செய்யய முடிவெடுக்கிறார். ராஜேந்திரனை கத்தியால் குத்தி கொல்கின்றனர் அவரது ஆட்கள். அபிராமியை காரைக் கொண்டு மோதி கோமா நிலைக்குத் தள்ளி விடுகின்றனர். அவளது உடலை
மருத்துவமனையில் பாதுகாப்பதற்குள் பெரும்பாடாக இருக்கிறது என கருதும் அவளது பெற்றோர்கள் அவளது உறுப்புகளை தானம் செய்கின்றனர். இதற்கிடையில் ஆவியுடன் காதல் செய்யும் குமார் அவளது உடலை காப்பாற்ற போராடுகிறார். அவள் உடலுடன் ஆவி சேர்ந்ததா, கோமா நிலை தெளிந்ததா? என்பதற்கான விடையை 2 மணி நேரத்திற்குள் சொல்லியிருக்கிறார் இயக்குனர் காண்டீபன்.

விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா என இரட்டை இசையமைப்பாளர்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதயம் நகருதே பாடல் நம் இதயத்தை வருடுகிறது. மற்றபடி பின்னணி இசை அருமை.

உதயா ஆவியுடன் பேசுவது, வழக்கம்போல் கொடூரமான முகத்தைக் கொண்டு பயமுறுத்தாத ஆவி, பிசாசு போல் பாசமான ஆவி என்பதைக் கொண்டு ஆவி படம் எடுத்திருக்கும் இயக்குநர் ஆவியால் எதையும் தொட முடியாது என்பதை உதாரணமாக உதயா கனிகாவின் கையில் மோதிரத்தை போடும்போது அது கீழே விழுவதும், பிறந்த நாள் கொண்டாட கேக்கில் எரியும் மெழுகுவர்த்தியை ஊதி அணைக்க முடியாமல் போவதையும் படத்தில் காட்டி இதுதான் ஆவி என நம்மை நம்ப வைக்கிறார்.

இயக்குநரிடம் ஒரு கேள்வி: ஆவியால் எதையும் தொட முடியாது எனும்போதும் அதன் மேல் படாது எனும் போதும், அழகான கவுனை மட்டும் எப்படி அணிந்து ஒய்யாரமாக வருகிறது? (அதுவும் இல்லாவிட்டால் ஆவி பாசம் ஆபாசம் ஆகி விடுமே என்கிறீர்களா?)

இடைவேளைக்கு முன்னர் எம்.எஸ்.பாஸ்கர், ஜெகன் குழுவினரும் இடைவேளைக்குப் பின் தேவதர்னியும் முண்டாசுப்பட்டி காமெடி நடிகரும் படத்தை முடிந்த அளவிற்கு காமெடியாக நகர்த்திச் செல்கின்றனர்.  படத்தில் நடித்த வில்லன் முகத்தில் உள்ள கொடூரம் படத்தில் எடுபடவில்லை. வழக்கமான பேய் படத்திலிருந்து மாறுபட்ட படமாக இருப்பதாலோ என்னவோ படத்தில் நச்சென்று திகிலாக உள்ளது என்று எதையுமே சொல்ல முடியவில்லை. இசை தான் படத்தை விட சில இடங்களிலில் திகில் படம் என்பதையே உணர்த்துகிறது.

ராஜேஷ் கே நாராயணனின் காமிரா மலேசியாவில் கடற்கரையோரம் உள்ள அபார்ட்மெண்டையும், முருகன் சிலை, ஆஞ்சநேயர் கோவில் என அழகாக படம்பிடித்துள்ளது. கதை, திரைக்கதை, வசனத்தை தாய் முத்து செல்வன் எழுதியுள்ளார். நா.முத்துக்குமார் பாடல்களையும் எழுத ஸ்ரீதர் நாராயணன், எஸ்.சிவசரவணன் படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஆவி குமார் படம் பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் இதென்னப்பா டீயிலிருந்து வரும் ஆவி போல் காமெடி ஆவியாக உள்ளது என்று ரசிகர்கள் சொல்கின்றனர். சிலர் ஆவி குமார் அல்ல பாவி குமார் என்றும் கிண்டலடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil